புதுச்சேரி:
தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது29). இவர் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரும் வழுதாவூர் சாலையில் ஓட்டல் நடத்தி வரும் கந்தனும் நண்பர்கள். சம்பவத்தன்று இரவு சுதாகர் வேலை முடிந்து தனது நண்பர் கந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
சுப்பையாநகர் அய்யப்பசாமி கோவில் தெருவில் வந்த போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் சுதாகரை தடுத்து நிறுத்தி இந்த வழியாக எப்படி செல்லலாம் என கேட்டு தகராறு செய்தனர். இதில் இருதரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சுதாகரை தாக்கி மறைத்து வைத்திருந்த பாட்டிலால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற கந்தனையும் அவர்கள் பாட்டிலால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த சுதாகர் மற்றும் கந்தன் ஆகிய இருவரும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரையும் பாட்டிலால் குத்தியது கலைவாணர் நகரை சேர்ந்த மணிரத்தினம் மற்றும் வினேபாநகரை சேர்ந்த சுரேஷ், பீட்டர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.