செய்திகள்

வீரவநல்லூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி ஆட்டோ டிரைவர் பலி

வீரவநல்லூர் அருகே ஆட்டோ மீது தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

சேரன்மகாதேவி:

வீரவநல்லூர் அருகே  உள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் என்ற மணி (வயது 38). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று மாலை இவர் தனது ஆட்டோவில் வீரவநல்லூர் தெற்கு பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக அம்பையை சேர்ந்த தனியார் பள்ளி வேன் வேகமாக வந்தது. திடீரென அந்த வேன் ஆட்டோ மீது மோதியது. இதில் லட்சுமி நாராயணன் பலத்த காயமடைந்தார். அவர் ஓட்டி வந்த ஆட்டோவும் சேதமடைந்தது. 

இதையடுத்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் லட்சுமிநாராயணன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.