பால் கொள்முதல் 
செய்திகள்

சென்னையில் தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்ந்தது

சென்னையில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் விலை உயர்வை நடைமுறைபடுத்துவதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளது.

இதன்படி ஹெரிடேஜ், திருமலா, டோட்லா, ஜெர்சி, சங்கம், சீனிவாசா, கோவர்த்தனா, ஜேப்பியார் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.

இதில் டோட்லா, கோவர்த்தனா, சங்கம், ஹெரிடேஜ், ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

திருமலா, ஜேப்பியார், ஆரோக்கியா ஆகிய பால் நிறுவனங்கள் இன்று முதல் விலை உயர்வை நடைமுறைபடுத்துவதாக அறிவித்துள்ளன. இதன்படி இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.38-ல் இருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.50-ல் இருந்து ரூ.52-க்கும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.56-ல் இருந்து ரூ.58ஆகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்திய நிலையில், தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை 4 ரூபாய் உடனே உயர்த்தி உள்ளனர். அதுவும் இந்த ஆண்டில் மட்டும் 3-வது முறையாக விலை உயர்வை அமல்படுத்தி உள்ளனர். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் பால் நிறுவனங்கள் அந்த மாநிலத்தில் பால் விலையை உயர்த்தாமல், இங்கு விலையை உயர்த்தி உள்ளனர். இது கண்டனத்துக்குரியது.

உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு தலையிட்டு விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.