செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை

திருபுவனை அருகே தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே தமிழக பகுதியான சேழாங்கனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சரசு (வயது62). இவர்களுக்கு வரதன் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமலிங்கம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் சரசுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை வரதன் உடனிருந்து கவனித்து வந்தார்.

நேற்று சரசு ஆஸ்பத்திரி கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வார்டுக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த வரதன் அங்கிருந்த நர்சிடம் மூலம் கழிவறைக்கு சென்று பார்க்குமாறு கூறினார். இதையடுத்து நர்சு கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சரசு தான் அணிந்திருந்த சேலையால் கதவின் தாழ்ப்பாளில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து வரதன் இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன்ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.