போரூர்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சையது அபுபக்கர் (36).
தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் அலுவலக வேலை காரணமாக நேற்று சென்னை வந்தார். வடபழனி நூறடி சாலையில் உள்ள சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.
சிறிது நேரம் கழித்து அதே நிறுவனத்தின் சென்னை கிளையில் பணி புரிந்து வரும் இளம்பெண் ஒருவர் சையது தங்கியுள்ள அறைக்கு வந்தார். நள்ளிரவு 11 மணி அளவில் சையது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தபோது அறையின் கழிவறைக்குள் சையதுவும் இளம்பெண்ணும் கையில் வெட்டுக் காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தனர்.
அங்கிருந்த கை கழுவும் “வாஷ் பேசின்” உடைந்து நொறுங்கி கிடந்தது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சையதுவுக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே ஓட்டலில் தகராறு ஏற்பட்டதா? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.