செய்திகள்

மார்த்தாண்டத்தில் தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

குழித்துறை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 26). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது நிறுவனத்திற்கு தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதை வாங்குவதற்கு அந்த நிறுவன அலுவலகத்திற்கு புருஷோத்தமன் சென்றார். அப்போது பார்சலுக்கான கட்டணமாக ரூ.180 கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கான ரசீதில் ரூ.140 மட்டும் போடப்பட்டு இருந்தது.

இதனால் இதுபற்றி புருஷோத்தமன் கேட்டபோது அவர்கள் சரியாக பதில் கூறாததால் அவர் இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பிறகு மீண்டும் பார்சலை பெறுவதற்காக அந்த அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த சிலர் அவரிடம் தகராறு செய்து தாக்கினார்கள்.

இதில் காயம் அடைந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இந்த தாக்குதல் பற்றி புருஷோத்தமன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்சல் நிறுவன ஊழியர்கள் செல்வின் (30), சஜின்குமார் (35), கிறிஸ்டோ பர் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களில் சுஜின்குமார் உண்ணாமலைக்கடை பேரூராட்சி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.