வேலூர்:
தனியார் கல்லூரி, பள்ளி பஸ்களுக்கான வருடாந்திர ஆய்வு பணி காட்பாடி தனியார் பள்ளியில் இன்று காலை தொடங்கியது. வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இதில் குடியாத்தம் வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டர் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்டராகவன், மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களில் முதல் உதவிப் பெட்டி, எமர்ஜென்ஸி டோர் ஆகியவைகளை சரியாக உள்ளதாக என தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பஸ்களை ஒரு நிறுத்தத்தில் நிறுத்தி மாணவர்களை ஏற்றி, இறக்கும் போது மாணவர்கள் சரியாக ஏறிவிட்டனரா என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கவனமாக பார்க்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படும் போதும், அதில் மாணவர்கள் சிக்கும் போது டிரைவர்கள், நடத்துனர்கள் விழிப்புடன் செயல்பட்டு மாணவர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வலியுறுத்தினர்.
இன்று வேலூர், குடியாத்தம் பகுதியில் உள்ள 250 பள்ளி, கல்லூரி பஸ்கள் ஆய்வுக்கு வந்தன.
பஸ்களில் வாகன எண், பள்ளி சின்னம், டயர், சீட் கண்டிசன் மற்றும் புகை பரிசோதனை எமர்ஜென்ஸி வழி கதவு ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல் பஸ்சில் சிகப்பு, மஞ்சள், வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இவை எல்லாம் முழுமையாக இருக்கும் வாகனங்களுக்கு 2017-ம் ஆண்டிற்கான அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
கலெக்டர் ராமன் ஆய்வு பணிகளை நேரில் வந்து பர்வையிட்டார்.