செய்திகள்

சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா?: பெங்களூர் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை மலர்

பெங்களூர்:

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10-ந் தேதி, டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆய்வு செய்தபின்பு, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறினார்.

இதுதொடர்பாக கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஊடகங்களில் விதிகளை மீறி பேட்டி அளித்த குற்றச்சாட்டிற்காக டிஐஜி ரூபா நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் 4 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். டிஜிபி சத்திய நாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய சிறை கண்காணிப்பாளராக அனிதா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக இந்த போராட்டம் நேற்று மதியமே சுமார் 1.30 மணியளவில் தொடங்கியது. சமையல் அறை மற்றும் நிர்வாக அறைக்கு அருகில் திரண்ட 200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமாரை உடனடியாக மாற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர். கிருஷ்ண குமார் மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கைதிகள் மீண்டும் இன்று காலை உணவை மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.