செய்திகள்

முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆற்காடு இளவரசர் வரவேற்பு

முஸ்லிம் பெண்களை ‘முத்தலாக்’ என்ற ஒரே வார்த்தையில் விவாகரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஆற்காடு இளவரசர் வரவேற்றுள்ளார்.

மாலை மலர்

முத்தலாக் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறைக்கு எதிராகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

இறுதியாக, முத்தலாக் முறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த பரபரப்பான தீர்ப்பு தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்தை அறிந்துகொள்ளும் ஆவல் மக்களிடையே மேலோங்கியுள்ளது.

இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் முக்கிய பொறுப்பாளர்களின் அவசர கூட்டம் நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இவ்வாரியத்தின் செயற்குழு உறுப்பினரும் இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவருமான ஜாபர்யாப் ஜிலானி, ‘இதுதொடர்பாக, உடனடியாக கருத்து தெரிவிப்பது உகந்ததாக அமையாது. சுப்ரீம் கோர்ட்டின் முழு தீர்ப்பையும் ஆய்வு செய்துவரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி போபால் நகரில் நடைபெறும் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவு செய்யப்படும்’ என குறிப்பிட்டார்.

இந்நிலையில், ‘முத்தலாக்’ என்ற ஒரே வார்த்தையில் விவாகரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஆற்காடு இளவரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆற்காடு இளவரசர் முஹம்மது அப்துல் அலி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரே அமர்வில் மூன்றுமுறை முத்தலாக் சொல்லும் நடைமுறை இஸ்லாம் மதத்தில் இல்லை. தலாக் அளிக்கப்படுவது தொடர்பான நடைமுறைகள் புனித குர் ஆனில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை தம்பதியர்களும், ‘பத்வா’ எனப்படும் மத உத்தரவை வெளியிடும் உலமாக்களும் அவ்வளவு எளிதாக மாற்றி கையாண்டுவிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து முஸ்லிம் சகோதரர்களும், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கற்றறிந்த உலமா பெருமக்களும் தங்களது கருத்து பேதங்களை மறந்து, முத்தலாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆற்காடு நவாப்புகள் என அழைக்கப்படுபவர்கள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கர்நாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இவர்கள் பொதுவாக கர்நாடக நவாப்புகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.

பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் கான் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வூதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆற்காடு இளவரசர் என்றும் அங்கீகரிக்கப்பட்டார்.

இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை ராயப்பேட்டை அருகேயுள்ள அமீர் மகாலில் ‘ஆற்காடு இளவரசர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தை அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.