செய்திகள்

பிரதமர் எச்சரிக்கை விடுத்த நாளில் மாட்டுக்கறி கொண்டு சென்ற வாலிபர் அடித்துக்கொலை

பிரதமர் எச்சரிக்கை விடுத்த நாளில் மாட்டுக்கறி கொண்டு சென்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய அரசு சமீபத்தில் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பசு பாதுகாப்பு இயக்கத்தினர் மாட்டிறைச்சி கொண்டு செல்வோரை தாக்கி வருகிறார்கள்.

சமீபத்தில் டெல்லியில் இருந்து அரியானாவுக்கு ரெயிலில் சென்ற வாலிபர் மாட்டிறைச்சி பிரச்சினையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுபோல் ஆங்காங்கே தாக்கப்படும் சம்பவங்கள் நடந்தன.

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சபர்பதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவர் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே ஜார்ஜ்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.

நேற்று மாருதி வேனில் மாட்டிறைச்சி கொண்டு சென்றார். இதை அறிந்து சிலர் அவரை வழிமறித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாலிபர் அஸ்கர் அன்சாரியை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினார்கள்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அவர் மாட்டிறைச்சி ஏற்றி வந்த வேனையும் வன்முறையாளர்கள் கவிழ்த்துப் போட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் காரணமாக ராம்கார் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.

வாலிபர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் கூறும் போது, அன்சாரி மாட்டிறைச்சி விற்பனை போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதில் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்தது. அவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர், அவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றது உறுதிப்படுத்தப்பட வில்லை’ என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டம் பிரியாபாத் கிராமத்தில் கடந்த திங்கட் கிழமையும் இதுபோல 55 வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் நேற்று வாலிபர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.