செய்திகள்

ஒக்கி புயல் பாதித்த லட்சத்தீவில் நிவாரண பணிகள் குறித்து மோடி அதிகாரிகளுடன் ஆய்வு

ஒக்கி புயலால் பாதிப்படைந்த லட்சத்தீவுக்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நிவாரண பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

மாலை மலர்

அகத்தி:

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

இந்த பிராந்தியங்களை உருக்குலைத்த ‘ஒக்கி’ புயல் பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

‘ஒக்கி’ புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படையினர் ஈடுபட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடமும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், புயல் பாதித்த பணிகளை பார்வையிட பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. இதற்காக நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூர் வந்த மோடி, இன்று காலை விமானம் மூலமாக லட்சத்தீவுகள் சென்றடைந்தார்.

அகத்தி நகரில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். மேலும், புயல் பாதித்த பகுதிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு கன்னியாகுமரி வர உள்ளார்.

இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கன்னியாகுமரி புறப்பட்டுச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.