செய்திகள்

குமரியில் பிரதமர் மோடி: ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை

ஒக்கி புயலால் பாதிப்படைந்த லட்சத்தீவுக்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

இந்த பிராந்தியங்களை உருக்குலைத்த ‘ஒக்கி’ புயல் பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

இந்நிலையில், புயல் பாதித்த பணிகளை பார்வையிட பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. இதற்காக நேற்றிரவு கர்நாடக மாநிலம் மங்களூர் வந்த மோடி, இன்று காலை விமானம் மூலமாக லட்சத்தீவுகள் சென்றடைந்தார்.

அகத்தி நகரில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். மேலும், புயல் பாதித்த பகுதிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வந்த அவரை அம்மாநில கவர்னர், முதல்வர் வரவேற்றனர்.

இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமாக அவர் கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றனர்.

இதனையடுத்து, கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டகடற்கரை கிராமங்களான தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, நீரோடி உள்பட 8 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அங்குள்ள ஆலய பங்கு தந்தையர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்டறிந்தார்.

இதுபோல பயிர் நிலங்கள் சேதமடைந்ததால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

கூட்டம் முடிந்த பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் அவர், அம்மாநில முதல்வர், அதிகாரிகளை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்துகிறார்.