செய்திகள்

பிரதமர், மத்திய மந்திரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் பிரதமர், மத்திய மந்திரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய நீர்வள ஆதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி, ‘காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை’ என்று கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

சென்னையில் அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கவேண்டுமென கோரிக்கை எழுப்பிய போது அதனை பிரதமர் உதாசீனம் செய்துள்ளார்.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் பிரதமர் மீதும், நிதின் கட்காரி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக அரசு தொடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews