செய்திகள்

தர்மபுரி அருகே வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பூசாரி கீழே விழுந்து பலி

தர்மபுரி அருகே வேகத்தடையை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பூசாரி கீழே சரிந்து விழுந்து இறந்தார்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி கல்மாரி (வயது 60). இவர் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கல்மாரி நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் அதியமான்கோட்டை ரெயில்வே கேட் அருகே வந்தார்.

அப்போது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் அதன்மீது வண்டியை வேகமாக ஓட்டி சென்றார். இதில் வண்டி நிலைத் தடுமாறி கீழே சரிந்து விழுந்து ரெயில்கேட்டில்இருந்த இரும்பு தகரத்தில் மோதி தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கால்மாரி இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.