ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் தேதியை நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதன்படி ஜூலை மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 20-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.
மனுதாக்கலுக்கு கடைசி நாள் 28-ந்தேதி ஆகும். 29-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 1-ந்தேதி வாபஸ் பெறுவதும் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தலித் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதி வேட்பாளர் பெயரை பா.ஜனதா அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.