செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவு: 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஜனாதிபதி தேர்தலில் 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 99 சதவீதத்தை நெருங்கியது. 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

இதேபோல் அனைத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டசபை வளாகங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், சத்திஸ்கர், அசாம், குஜராத், பீகார்,அரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப் மிஸ்ரா கூறுகையில், ‘ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு 99 சதவீதத்தை எட்டியுள்ளது. அன்புமணி ராமதாஸ் (பாமக), தபாஸ் பால் (திரிணாமுல் காங்.), ராம் சந்திரா (பிஜு ஜனதா தளம்) ஆகிய 3 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை’ என தெரிவித்தார்.

இன்று பதிவான வாக்குகள் 20-ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும். முதலில் பாராளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பெட்டி திறந்து வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அகரவரிசை அடிப்படையில் மாநிலங்களில் இருந்து வரப்பெற்ற வாக்குப்பெட்டிகள் திறந்து வாக்குகள் எண்ணப்படும். 4 டேபிள்களில், 8 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.