புதுடெல்லி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரணாப் முகர்ஜியை மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யலாம் என்று சில எதிர்க்கட்சிகள் கூறின. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்கவில்லை. எனவே ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க போட்டி நடக்க இருப்பது உறுதியாகி விட்டது.
பா.ஜ.க. சார்பில் ஒடிசாவில் உள்ள பழங்குடி இன பெண் தலைவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. அவரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, முக்கிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். சமீபத்தில் அவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து மம்தாவும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கி உள்ளார். அடுத்த வாரம் வியாழக்கிழமை அவர் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட் நாயக்கை சந்தித்து பேச உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால் உடல் நல குறைவு காரணமாக அவர் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த வாரம் பொது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனால் ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கும்.