டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டின் சர்தாம் யாத்திரைக்காக பத்ரிநாத் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் ஒலிக்க, சங்கின் முழக்கத்துடன் ஆலய சன்னிதானம் இன்று வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் முதல்நாள் வழிபாட்டுக்காக டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டேராடூன் நகரில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்றிரவு தங்கி இருந்தார்.
இன்று காலை 8.25 மணிக்கு பத்ரிநாத் ஆலயத்துக்கு வந்த பிரணாப் முகர்ஜி, பயபக்தியுடன் பத்ரிநாதரை வழிபாடு செய்தார். சுமார் இரண்டு மணிநேரம் அங்கிருந்துவிட்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
உத்தரகாண்ட் மாநில கவர்னர் கிருஷ்ணகாந்த் பால், முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோரும் ஜனாதிபதியுடன் சாமி தரிசனம் செய்தனர்.