புதுடெல்லி:
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சமீபத்தில் இலங்கை சென்றிருந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சேவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி விடுத்திருந்த அழைப்பை நினைவுபடுத்தினார்.
இதற்கிடையே, இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்சே இந்தியா வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த கோத்தபய ராஜபக்சேவை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.