செய்திகள்

ஓட்டு எனும் தங்க ஓடு மக்கள் கையில் - குட்டிக்கதை கூறி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

ஓட்டு எனும் தங்க ஓடு மக்கள் கையில் உள்ளது என்று குட்டிக்கதை கூறி பிரேமலதா விஜயகாந்த் விளக்கி பேசினார்

மாலை மலர்

விழாவில் ஓட்டு எனும் தங்க ஓடு மக்கள் கையில் உள்ளது என்று குட்டிக்கதை கூறி பிரேமலதா விஜயகாந்த் விளக்கி பேசினார். அவர் பேசியதாவது:-

ஒரு மாபெரும் குருவிடம் ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான். குரு பிச்சைக்காரருக்கு ஒரு திருவோட்டினை கொடுத்து, அதனை வைத்து பிழைத்துக் கொள் என்று கூறினார். தொடர்ந்து 3 தலைமுறைகளாக அந்த ஓட்டினை வைத்து பிச்சை எடுத்து வந்தனர். 3 தலைமுறை கடந்து மீண்டும் அதே போல் மகானிடம், 3-வது தலைமுறையை சேர்ந்தவர் பிச்சை கேட்டார்.

அப்போது திருவோட்டினை பார்த்த அந்த மகான் பிச்சைக்காரனிடம் இருந்து அதனை பிடுங்கி கொண்டார். அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து ஓட்டின் மீது தேய்த்தார். அப்போது பிச்சைக்காரன் அந்த ஓடு மிகவும் ராசியானது. அதனை வைத்து 3 தலை முறையாக பிழைப்பு நடத்தி வருகின்றோம். அதனை கொடுத்து விடுங்கள் என பிச்சைக்காரன் எவ்வளவு கூறியும் மகான் தொடர்ந்து தேய்த்துக் கொண்டே இருந்தார். அவர் தேய்க்க தேய்க்க ஓடு தங்கம் போல் ஜொலித்தது. பிச்சைக்காரனுக்கு ஒரே ஆச்சரியம் நாம் வைத்திருந்தது தங்கமா என்று.

இந்த ஓடு உன் தரித்திரத்தை தீர்க்க மகான் கொடுத்த சீதனம். அதை வைத்து பிழைக்காமல் 3 தலைமுறைகளாக பிச்சை எடுத்து வருகின்றீர்கள். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த போவதில்லை. இனி யாவது பிழைக்க கற்றுக் கொள்ளுங்கள் என மகான் கூறினார்.

இந்த கதையில் ஓடுவிற்கு பதிலாக ஓட்டு என்ற மக்களாட்சியை கொடுத்து 3 தலைமுறைகளாகி விட்டது. ஆனால் இன்றும் நாம் மின்சாரம், தண்ணீர், சாலை, வேலை வாய்ப்பு என பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஓட்டு எனும் தங்க ஓடுவினை மக்கள் கையில் வைத்துள்ளீர்கள். அதனை வைத்து நல்ல தீர்ப்பினை கூறுங்கள். இனி வரப்போகும் தேர்தல்களிலாவது நியாயமான, மக்களுக்கான ஆட்சியை கொடுக்க நல்ல தலைவரை தேர்ந்து எடுங்கள் என்றார்.