செய்திகள்

புதிய கட்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்க நாங்கள் முட்டாள் அல்ல- பிரேமலதா பேச்சு

புதிய கட்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்க நாங்கள் முட்டாள் அல்ல. தேர்தல் வந்தால் தே.மு.தி.க. யார் என்று தெரியும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #premalatha #newparties #dmdk

மாலை மலர்

திருச்சி:

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தே.மு. தி.க. சார்பில் உலக மகளிர் தின விழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.எல்.கிருஷ்ணகோபால், வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட அவைத்தலைவர் அலங்கராஜ் வரவேற்று பேசினார்.

தே.மு.தி.க. மாநில மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மகளிருக்காக பாடுபடும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். விஜயகாந்திற்கு கருப்பு எம்.ஜி.ஆர். என்ற பெயர் மக்கள் கொடுத்தது. பேரிடர் காலங்களில் களத்தில் நின்று மக்களுக்கு உதவியவர். ஒரு முறை தோல்வியடைந்ததால் யார் என்ன வேண்டுமானாலும் பேச வேண்டும் என்பது இல்லை. வெண்கலத்தை பார்த்து பித்தளைகள் பேச தகுதி இல்லை.

தமிழகத்தில் தினம் ஒரு கட்சி, தினம் ஒரு தலைவர்கள் வருகின்றனர். புதிய கட்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்க நாங்கள் முட்டாள் அல்ல. தேர்தல் வந்தால் தே.மு.தி.க. யார் என்று தெரியும். பிற கட்சிகள் காணாமல் போகும்.

சிறுமி ஹாசினி, உஷா, ஐ.டி. ஊழியர் லாவண்யா, கல்லூரி மாணவி அஸ்வினி என பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் குறித்த பட்டியல் தினமும் வருகிறது. பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விளங்குகிறது.

உஷாவை துரத்தி சென்ற போது இன்ஸ்பெக்டர் காமராஜ் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். காவல் துறை மக்களை காக்கும் துறையாக இருக்க வேண்டும். காவு வாங்கும் துறையாக இருக்க கூடாது. மக்களை ஏளனம் செய்யும் துறையாக காவல் துறை மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தே.மு.தி.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலை, கொள்ளை, தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக திரியும் போது ஹெல்மெட் போடாதது குற்றமா? பெண் செல்லும் பைக்கை எட்டி உதைக்கும் அதிகாரம் கொடுத்தது யார்? ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் காவலர்களே தற்கொலை செய்து கொள்கின்றனர்.

100, 200-க்கும் மக்களை கொடுமை செய்யும் மோசமான நிலை உள்ளது. மாணவி அஸ்வினி கொலையில், கொலையாளி தான் அவருக்கு கல்வி செலவு செய்துள்ளதாகவும், தாலி கட்டியதாகவும் கூறப்படுகிறது. காதலிக்க தைரியம் இருக்கும் போது அவர்களையே கரம் பிடித்து வாழ்ந்து காட்டுங்கள்.

எனக்கு பின்னால் எனது கணவர் உள்ளார். எங்கள் லட்சியத்தினை அடையும் வரை எந்த இடையூறு வந்தாலும் பின் வாங்க மாட்டோம். அதற்காக பொறுமை காத்து வருகின்றோம். சிகிச்சைகள் முடிந்து மீண்டும் வெகு விரைவில் கேப்டன் உங்கள் முன் வருவார்.

வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணியுங்கள். ஒரு சட்டம் இயற்றும் போது அதனை அமல்படுத்துவதில் காவல் துறை, கோர்ட்டு, மக்கள் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பெரியார் குறித்து பேச எந்த தலைவருக்கும் தகுதி இல்லை. பெரியார் புரட்சியை ஏற்படுத்தியவர். திருச்செந்தூரில் விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு தாக்கப்பட்டுள்ளார். அவரை அடிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது. இது ஒரு கண்டிக்கத்தக்க செயல். சிந்துபாத் தொடர்போல் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்சினை நீண்டு கொண்டே செல்கிறது.

விஜயகாந்த வந்தால் தான் முடியும், அது உண்மை. நாம் ஏன் அண்டை மாநிலத்தில் கையேந்த வேண்டும். கடவுள் போதிய மழையை கொடுக்கிறார். அதை சேமிக்க கூடிய தகுதி இல்லாதவர்களிடம் ஆட்சியை கொடுத்ததால் தான் இன்று அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலை வந்துள்ளது.

கோடை காலத்தில் ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால் போன்றவற்றை தூர் வாரினால் அண்டை மாநி லங்களில் கையேந்தும் நிலைவராது. தொலை நோக்கு சிந்தனை இல்லை. இது மாற வேண்டும். அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதுவரை ஆட்சி நீடிக்குமா? என்பதே கேள்வி.

பட்ஜெட் தாக்கல் என்பது ஒரு சடங்காக மாறிவிட்டது. இது மாற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பை தர வேண்டும். ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். வரிகள் மூலம் மக்களை வலிகள் உள்ளவர்களாக மாற்றியதே மோடி செய்த பெருமை. விரைவில் உலகம் உற்று நோக்கும் அளவு மிகப்பெரிய மாநாடு நடத்துவோம்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #tamilnews #premalatha #newparties #dmdk