திருச்சி:
திருச்சியில் இன்று மாலை தே.மு.தி.க. சார்பில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. மாநில மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை, மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் பல ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தினால் அவர் இந்த கருத்தை தெரிவித் திருக்கலாம். இருப்பினும் சட்ட ரீதியாக எடுக்கும் முடிவைத்தான் தே.மு.தி.க. ஆதரிக்கும்.
தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. அதில் உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. உஷாவின் கணவர் ஹெல்மெட் அணியாததால் இன்ஸ் பெக்டர் காமராஜ், பின்னாலேயே துரத்தி சென்று மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹெல்மெட் போடாததற்காக அபராதம் விதித்திருக்கலாம். அதை விட்டு விட்டு மனிதாபிமானமற்ற செயலில் இன்ஸ்பெக்டர் ஈடுபட்டுள்ளார். அவரை சஸ்பெண்டு செய்தது மட்டுமின்றி மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும். அது மற்ற காவலர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
மேலும் உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த சமயத்தில் மக்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே அவர்களை மன்னித்து விட வேண்டும். நிதி உதவி ஒரு உயிருக்கு ஈடு இணையாகாது. உஷாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை தே.மு.தி.க. செய்யும்.
தமிழகத்தில் தினமும் ஒவ்வொரு கட்சிகள், தலைவர்கள் உருவாகி வருகின்றனர். ஆனால் அதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கடைசியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வர் ஆவார்.
காவிரி பிரச்சினையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் இயற்கை வளம். ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் சுரண்டி விடுகிறார்கள். எம்.சாண்ட் மணல் உறுதிதன்மை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. ஆற்றில் மணல் எடுப்பது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தாக்கியதால் உயிரிழந்த உஷாவின் சகோதரர் வசித்து வரும் திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரில் உள்ள வீட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளுடன் சென்றார். பின்னர் அங்கு உஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #tamilnews #premalatha #RajivGandhi #dmdk