திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கள்ளக் குடி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயசாந்தி (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தநிலையில் விஜயசாந்தி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்றுமுன்தினம் அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது விஜயசாந்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். அங்கு விஜயசாந்தியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருநாவுக்கரசு நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஜயசாந்திக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.