பெரம்பலூர்:
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, புளியங்குறிச்சி அருகே உள்ள காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தேவி (வயது 29). இவருக்கு குழந்தை இல்லாததால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கர்ப்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியான தேவிக்கு ஏற்கனவே சளி, இருமல், காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கடந்த 20-ந்தேதி இரவு காய்ச்சல் அதிகமானதால், அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் அருகே வந்த போது, தேவிக்கு மூச்சுத் திணறல் அதிகளவில் ஏற்பட்டதால், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். சளி, இருமல், காய்ச்சல், மூச்சு திணறலுடன் தேவி உயிரிழந்ததால், அவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாரா? என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறையினர், அவரது சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தனர். பரிசோதனையின் முடிவில் தேவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தேவியின் உடல், அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.