ஆமதாபாத்:
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் தேர்தலில் தனது வேட்பாளர் தோல்வி அடைந்ததால், அதன் செயல் தலைவராக இருந்த பிரவீண் தொகாடியா விசுவ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து விலகினார். ‘விசுவ இந்து பரிஷத்தில் நான் இனி இல்லை, தொடர்ந்து இந்துக்களின் நலனுக்காக போராடுவேன். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஆமதாபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன்’ என்று அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
ஆமதாபாத் திரும்பிய அவர் நேற்று தனது ஆதரவாளர்களையும், குஜராத்தில் உள்ள விசுவ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேசினார். அந்த அமைப்பின் மாநில தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் திட்டத்தை இறுதி செய்வது பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் தொகாடியா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு மீது எனக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. உண்மையில் அது குஜராத்தில் 2002 சம்பவங்களுக்கு பிறகு மெதுவாக தொடங்கியது. கோத்ரா வன்முறைக்கு பிறகு ஏராளமான இந்துக்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது இது எப்படி நடந்தது என்பது எனக்கு புரியவில்லை. ஆயிரக்கணக்கான இந்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் விசுவ இந்து பரிஷத் நரேந்திர மோடிக்கு முழு ஆதரவு அளிக்க முன்வந்தது. ஆனால் அவர் குண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார். அவரது அறிவிப்புக்கு பின்னர் 11 பசு பாதுகாவலர்களுக்கு ஜார்கண்டில் ஆயுள் தண்டனை (கோர்ட்டு உத்தரவு) விதிக்கப்பட்டது. காங்கிரஸ் அரசில் கூட இது நடக்காது.
இந்துக்கள் நலனுக்காகவும், அயோத்தியில் ராமஜென்மபூமி கோவில் கட்டவும், தேசிய அளவில் பசுக்கள் வெட்டப்படுவதை தடுக்கக்கோரியும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும் உண்ணாவிரதம் நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews