செய்திகள்

என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்ல சதி: விசுவ இந்து பரிஷத் தலைவர் குற்றச்சாட்டு

என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்ல சதி நடக்கிறது என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

ஆமதாபாத்:

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக இருப்பவர் பிரவீன் தொகாடியா. 62 வயதாகும் இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரை ஒரு வழக்கில் கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் ஆமதாபாத் விரைந்தனர். அங்குள்ள சோலா போலீஸ் நிலைய போலீசார் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். அவர் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் பிரவீன் தொகாடியா இருக்கும் இடம் பற்றி எந்த தகவலும் தெரிய வராததால் அவருக்கு என்ன ஆனது என்பது உடனடியாக தெரியவரவில்லை. இதனால் பெரும் பரபரப்பு உருவானது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் பிரவீன் தொகாடியா மயக்கம் அடைந்த நிலையில் ஷாகிபாக் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் அவர் உணர்வற்ற நிலைக்கு ஆளானார் என்று விசுவ இந்து பரிஷத் தெரிவித்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரவீன் தொகாடியா நேற்று கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று(நேற்றுமுன்தினம்) காலை நான் பூஜையில் இருந்தேன். அப்போது பெரும்அளவிலான ராஜஸ்தான் மாநில போலீசார், குஜராத் போலீசாருடன் இணைந்து என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல வருவதாக எனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்தது.

இந்த தகவலை எனது மெய்க்காப்பாளர்களிடம் தெரிவித்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி ஆமதாபாத் விமான நிலையத்துக்கு புறப்பட்டேன். அப்போது ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவிடமும், அந்த மாநில உள்துறை மந்திரியிடமும் பேசினேன். இருவரும் நாங்கள் போலீசை அனுப்பவில்லையே என்று மறுத்தனர்.

இதேபோல்தான் இங்கும்(குஜராத்) என்னை கைது செய்வதாக கூறப்படுவது பற்றிய தகவல் முதல்வர் விஜய் ரூபானிக்கும், உள்துறை மந்திரிக்கும் தெரியவில்லை. இது எனக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தேன்.

பிறகு, நான் ராஜஸ்தான் வக்கீல்களை தொடர்பு கொண்டு கைது வாரண்டை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர்களோ, இது கோர்ட்டு உத்தரவு என்பதால் ரத்து செய்வது கடினம் என்றனர். எனவே நான் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் சென்று கங்காபுத் நகர கோர்ட்டில் ஆஜராக முடிவு செய்தேன்.

ஆட்டோவில் சென்றபோது எனக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அதனால் ஆட்டோ டிரைவரிடம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் என்னை சேர்க்குமாறு கூறினேன். அதன்பிறகு நான் உணர்வை இழந்துவிட்டேன். எனக்கு மீண்டும் நினைவு வந்தபோது ஏதோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. எனக்கு மரணத்தை கண்டு பயம் கிடையாது. என்கவுண்ட்டர் பற்றியும் அச்சம் இல்லை. அதேநேரம் நாட்டின் சட்ட விதிகளின்படி என்னை பாதுகாத்துக் கொள்வது எனது உரிமை ஆகும்.

யாருடைய தூண்டுதலின் பேரில் என் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது என்பது பற்றி உரிய நேரம் வரும்போது தெரிவிப்பேன். என்னுடன் தொடர்பில் இருக்கும் டாக்டர்களுக்கு சி.பி.ஐ. மிரட்டல் விடுக்கிறது.

இந்துக்களுக்காக நான் குரல் கொடுப்பதை ஒடுக்க முயற்சி நடக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, விவசாயிகள் மற்றும் பசுக்களை கொல்லுதல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப விடாமல் தடுக்க இப்படி நடக்கிறது. அதனால்தான் என் மீதான வழக்கை தூசு தட்டி எடுத்து இருக்கின்றனர். மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆன பிறகு நேரடியாக கோர்ட்டுக்கு சென்று சரண் அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரவீன் தொகாடியாவின் உடல் நிலை நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மருத்துவமனை டாக்டர்கள் நேற்று மதியம் தெரிவித்தனர். #tamilnews