செய்திகள்

பிரவீண் தொகாடியாவுடன் ஹர்திக் பட்டேல் சந்திப்பு

பிரவீண் தொகாடியாவை குஜராத் பட்டேல் அமைப்பின் தலைவரான ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மொத்வாடியா ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

மாலை மலர்

அகமதாபாத்:

விசுவ இந்து பரி‌ஷத் அகில இந்திய செயல் தலைவராக பிரவீண் தொகாடியா இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

சமீப காலமாக இவருக்கும், பாரதிய கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரவீண் தொகாடியாவின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் ஆகும். அவர் அகமதாபாத்தில் வசித்து வந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநி லத்தில் இவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கைது செய்வதற்காக ராஜஸ்தான் போலீசார் அகமதாபாத்துக்கு வந்தனர்.

இதை அறிந்த பிரவீண் தொகாடியா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவர் அகமதாபாத் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக பிரவீண் தொகாடியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீண்ட காலம் பழைய வழக்கு ஒன்றில் என்னை கைது செய்வதற்கு ராஜஸ்தான் போலீசார் அனுப்பப்பட்டு இருப்பதாக அறிந்தேன். அவர்கள் என்னை என் கவுண்டரில் கொல்ல திட்டமிட்டு வந்திருப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.

எனவே, நானே விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராக ஆட்டோவில் சென்றேன். ஆனால், வழியில் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவரிடம் என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி கேட்டு கொண்டேன். அதற்குள் மயங்கி விழுந்து விட்டேன். நான் கண்விழித்து பார்த்த போது, ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

என்னை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் வந்திருப்பது குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி, குஜராத் முதல்-மந்திரி ஆகியோரிடம் போனில் பேசினேன். அவர்கள் அப்படி போலீசார் யாரும் அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள்.

முதல்-மந்திரிகளுக்கே தெரியாமல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் என்னை ஒழிக்கும் சதித் திட்டம் இருக்கிறது.

நான் சமீப காலமாக விவசாயிகள் பிரச்சினை, பசுவதை பிரச்சினை, ராமர் கோவில் விவகாரம் போன்றவை பற்றி பேசி வருகிறேன். இது, சிலருக்கு பிடிக்கவில்லை.

இதனால் தான் என்னை ஒழித்து கட்டுவதற்கு முயற்சி நடக் கிறது. எனக்கு எதிரான பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. என்னை ஒடுக்க முயற்சிப்பவர்களின் பெயர்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.

இவ்வாறு பிரவீண் தொகாடியா கூறினார்.

அவர் பாரதிய ஜனதா தலைவர்கள் சிலரை குறிவைத்து இவ்வாறு குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரவீண் தொகாடியாவை குஜராத் பட்டேல் அமைப்பின் தலைவரான ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மொத்வாடியா ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கைகோர்த்து ஹர்திக் பட்டேல் செயல்பட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், ஹர்திக் பட்டேலும் பிரவீண் தொகாடியாவை சந்தித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

பிரவீண் தொகாடியா பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஹர்திக் பட்டேலும், காங்கிரசும் முயற்சித்து இருப்பதாக தெரிகிறது.

சமீப காலமாக பிரவீண் தொகாடியாவுக்கு விசுவ இந்து பரி‌ஷத்தில் இருக்கும் செல்வாக்கை குறைக்க சிலர் முயற்சிப்பதாகவும், இதன் ஒரு பகுதியாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.