செய்திகள்

தேசிய சீனியர் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரனோய்

மும்பையில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாலை மலர்

மும்பை:  

82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. 

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் 11-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் மோதினர்.

முதலில் இருந்தே பிரனோய் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்துடனான முதல் செட்டை 21 -15 என்ற கணக்கில் பிரனோய் கைப்பற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடினார். பிரனோயின் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 16-21 என்ற கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் கைப்பற்றி அசத்தினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் பிரனோய் மிகவும் அதிரடியாக விளையாடினார். அவரது ஆட்டத்துகு ஈடுகொடுக்க முடியாமல் கிடாம்பி ஸ்ரீகாந்த் சரணடைந்தார். இதையடுத்து, கிடாம்பி ஸ்ரீகாந்தை 21 - 7 என்ற கணக்கில் வென்று பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்.