அடுத்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார்.
அவரைவிட பலம் வாய்ந்த தலித் தலைவர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேநேரம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்தவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. 63 வயது பிரகாஷ் அம்பேத்கர் முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது பாரிப் பகுஜன் மகாசங்கம் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
இதுபற்றி ஐதராபாத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “பிரகாஷ் அம்பேத்கரை நிறுத்துவது குறித்து நாங்கள் சிந்தித்து வருகிறோம். காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் இதற்கு ஒப்புக்கொண்டால் அவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம். எங்களால் வெற்றி பெற முடியாமல் போனாலும் கூட போட்டி கடுமையாக இருக்கவேண்டும்” என்றார்.
ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் கூறுகையில், இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடை பெறும் அனைத்து எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் மற்ற கட்சி களுடன் இணைந்து செயல் படுவோம் என்று தெரிவித்தார்.
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் அக்கட்சியின் மூத்த தலைவர் அசுடோஷ் கூறும்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு பின்பு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.