திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரிச்சந்திரா, அடப்பாறு, வெள்ளை ஆறுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புகளை பார்வையிட தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டில் காவிரி டெல்டாவில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1562 கோடி மதிப்பில் பாசன ஆறுகள், வடிகால் ஆறுகளை சீரமைத்து தூர்வாரப்படும் என்று அறிவித்தார்.
முதல்கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.962 கோடி மதிப்பில் வளவனாறு, பாண்டையாறு, அரிச்சந்திரா ஆறு, வெள்ளையாறு, அடப்பாறு உள்ளிட்ட ஆறுகளில் கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 30 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.
மேட்டூர் அணையில் இருந்து இன்று திறந்து விடப்படும் தண்ணீரை ஒருபோக சம்பாசாகுபடிக்கு கொண்டு செல்லும் ஆறுகள் நிலைகுலைந்து கிடக்கிறது. இதனால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பணியை தொடங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.