மின்சார மானியம் ரத்து 
செய்திகள்

பணக்கார விவசாயிகளுக்கு மின்சார மானியம் ரத்து- பஞ்சாப் அரசு முடிவு

பணக்கார விவசாயிகளுக்கான மின்சார மானியத்தை ரத்து செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பாட்டியாலா:

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் 14½ லட்சம் வேளாண் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன.

இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பணக்கார விவசாயிகளுக்கான மின்சார மானியத்தை ரத்து செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் தலைமையில் சிறப்பு மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பணக்கார விவசாயிகளுக்கான மின்சார மானியத்தை ரத்து செய்வது என்று விவாதிக்கப்பட்டது.

அதேநேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான மின்சார மானியம் ரத்து செய்யப்படமாட்டாது.

பஞ்சாப் மாநிலத்தில் 10 ஏக்கர்களுக்கு மேல் வைத்திருப்பவர்களே பணக்கார விவசாயிகள் ஆவார்கள். அவர்களுக்கு தான் மின்சார மானியம் ரத்து செய்யப்படுகிறது.

மாநில அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பணக்கார விவசாயிகளின் மானியம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

5 முதல் 10 ஏக்கர்கள் வைத்து இருப்பவர்கள் நடுத்தர விவசாயிகள் ஆவார்கள். பஞ்சாப் மாநில அரசு விவசாயத்துக்கு 6,060.3 கோடி மானியம் வழங்குகிறது.

பணக்கார விவசாயிகளுக்கு மின்சார மானியம் ரத்தானால் மானியத் தொகை 4,848.2 கோடியாக குறையும்.