ஜெனிவா:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாளை காஷ்மீர் பகுதியில் இந்திய அரசு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் எதிரே பாகிஸ்தானுக்கு எதிராக போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில் பாகிஸ்தான் அரசு பலூசிஸ்தான் மற்றும் கைபர் பகதுங்குவா பகுதிகளில் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு இனப்படுகொலை செய்துவருவதாக என எழுதப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ராணுவம் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை ஏவி விட்டு மக்களை கொன்று வருவதாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரம் ஒன்றில் பாகிஸ்தான் அரசு பலூசிஸ்தானில் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் திரையிடப்பட உள்ளது. அந்த கூடாரத்தில் மனித உரிமைகள் ஆர்வளர்கள், சமூக ஆர்வளர்கள் மற்றும் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.