நிவாரண நிதியை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ரவீந்திரன் வழங்கிய போது எடுத்தபடம். 
செய்திகள்

பொறையாறில் பணிமனை மேற்கூரை இடிந்து 8 பேர் பலி: ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.64½ லட்சம் நிதி உதவி

பொறையாறில் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியான போக்குவரத்துகழக ஊழியர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

மாலை மலர்

கும்பகோணம்:

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையின் மேற்கூரை கடந்த மாதம் 20-ந் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் அன்பரசன் (வயது 25), மணிவண்ணன் (52), தனபால் (49), பிரபாகரன் (53), சந்திரசேகரன் (44), முனியப்பன் (41), பாலு (51), கண்டக்டர் ராமலிங்கம் ஆகிய 8 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். மேலும் வெங்கடாச்சலம், செந்தில் குமார், பிரேம் குமார் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பலியான போக்குவரத்துகழக ஊழியர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய கும்பகோணம், நாகை மணடல அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர்.

அதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.64 லட்சத்து 62 ஆயிரத்து 784 பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ரவீந்திரன் கலந்து கொண்டு பலியான போக்குவரத்துக் கழக ஊழியர் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சத்து 5 ஆயிரமும், பலத்த காயமடைந்த வெங்கடாச்சலம் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்த செந்தில் குமார், பிரேம் குமார் குடும்பத்துக்கு தலா 1 லட்சத்து 31 ஆயிரமும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இளங்கோ, முதன்மை நிதி அலுவலர் வெங்கடாச்சலம் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், தொழிற் சங்கத்தினர் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.