தேன்கூடு திட்டத்தை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார் 
செய்திகள்

ஏழை-எளிய மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த தேன்கூடு திட்டம்

ஏழை-எளிய மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த தேன்கூடு திட்டத்தை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

சென்னை:

தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா பொதுச்செயலாளர் ஐயப்பன் தலைமையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கபதக்கம் வென்ற கோகுல் சிவாஸ்க்கு ‘வீரரத்னா’ விருதும், ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் 1500 மீட்டர், 5000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் சென்ற இட்ரிஸ் முகமதுக்கு ஓட்டப்பந்தய வாழ்நாள் சாதனையாளர் விருதும், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த வய்யனனுக்கு பயிற்றுநர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த யோகா சாதனையாளர் இனியாவுக்கு இன்ஸ்பைரே‌ஷன்ஸ் விருதும் அமைச்சர் பாராட்டி வழங்கினார்.

விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாநில தடகள போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கு உதவி செய்யவும் “தேன்கூடு திட்டத்தை” அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்து முதல் உதவித்தொகை அளித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

விளையாட்டுத் துறைக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தி அவர்கள் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்றும், ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐயப்பனை இந்த நல்ல நேரத்தில் பாராட்டுகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்மஸ்ரீ ஒலிம்பியன் பாஸ்கரன் (கவுரவத்தலைவர்) பேசியதாவது:-

தமிழக விளையாட்டு வீரர்கள் சங்கம் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு அரசிடம் கோரிக்கை வைத்து பல்வேறு உதவி பெற்று கொடுத்துள்ளது. அவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பொதுச்செயலாளர் ஐயப்பன் பேசும்போது, மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்திற்கு 291 கோடி நிதி அதிகமாக வழங்கியுள்ளதும். மாநில அரசின் காலை உணவு திட்டமும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவ- மாணவிகளுக்கு நன்கு பயனாக இருக்கும். தமிழக விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ஒரு மேல் சபை உறுப்பினர் பதவியை, ஆக்கி ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவருமான பத்மஸ்ரீ பாஸ்கரனுக்கு வழங்க வேண்டும் என்று பேசினார்.

இவ்விழாவில் அர்ஜூனா விருது பெற்ற வீரர் ராஜரத்தினம், முன்னாள் காவல்துறை அதிகாரி சொக்கலிங்கம், துணைத் தலைவர்கள் ராஜ்குமார் பாண்டியன், சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார், ஜீன் மற்றும் ஜெகதலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சொக்க லிங்கம் ஐ.பி.எஸ். தலைமையில் தடகள சங்க செயலாளர் லதா, மற்றும் ராஜன் பரிசுகளை வழங்கினர்.

துணைச்செயலாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இளங்கோ, செயலாளர் இப்ராகீம், சேலம் மாவட்ட செயலாளர் ரேனுகா ஆலிபர் மற்றும் பொருளாளர் குணசீலன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் ஜெய் சங்கர், அகஸ்டின், சந்தீப்குமார், அர்ஜூன், வெங்கடாசலபதி, சுப்பிரமணியன், மகேந்திரன், பில்டர் சந்திரகுமார், எடி.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் கலாநிதி நன்றி கூறினார்.