ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக - ஆந்திர அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யாக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.
கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டு அதன் பின்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
நேற்று காலை 6 நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 29.30 அடியாக பதிவானது. 1582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் 2-ந் தேதி நீர் மட்டம் 26.07 அடியாக பதிவாகி 1012 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. அதன்படி 38 நாட்களில் ஏரியின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
மேலும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 38 நாட்களில் 1085 மில்லியன் கனஅடி (1.085 டி.எம்.சி. ) தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 438 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கண்டலேறு அணையிலருந்து இதே அளவில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ளளவு எட்டும் வாய்ப்பு ஏற்படும். அப்படி நீர் மட்டம் முழு கொள்ளளவு எட்டினால் பூண்டி ஏரியிலிருந்து லிங்க் கால்வாய் மூலமாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்க சாத்தியமாகும். அப்படி புழல் ஏரிக்கு தண்ணீர் போய் சேர்ந்தால் சென்னையில் தெரு குழாய்களில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும்.