பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த ஆண்டார் குப்பத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் உள்ளது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான குத்தகை தொகையை வசூலிப்பதிலும் மற்றும் கடை வாடகை, தரிசன அர்ச்சனை அபிஷேக டிக்கெட்டுகள் விற்பனை செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்பிரமணியம் தலைமையிலான 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 3 மணி நேரம் ஊழியர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.
பின்னர் வருவாய் பதிவேடு மற்றும் அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை தொடர்பான முறைகேடுகள் குறித்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் முறைகேடுகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் அதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.