நல்லம்பள்ளி:
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் திரும்பப்பெற கோரியும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சார்பில் தர்மபுரி வள்ளலார் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் வரவேற்றார்.
காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோவி. சிற்றரசு, திரவிடர் கழக மாவட்ட செயலாளர் மாதன், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ். தேவராஜன், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மதிமுக மாவட்ட செயலாளர் தங்கராஜ், முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
பேரறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் முதன் முதலில் 75 கி.மீட்டருக்கு மேல் இயங்கும் பஸ்கள் தேசிய மயமாக்கப்பட்ட விரைவு பஸ்கள் என்று 1967-ல் அறிவித்தார்.
பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கினார். பல்வேறு பெயர்களில் போக்குவரத்து கழகங்கள் நிறுவினார். தனியார் பஸ்கள் இருக்கக் கூடாது என்று சட்டத்தையும் கொண்டு வந்தார்.
பொதுமக்களும், கிராம புறமக்களும் பயனடையும் வகையில் கருணாநிதி இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அவர் ஆட்சி காலத்தில் 5 பைசாவாக இருந்த பஸ் கட்டணத்தை எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு 18 பைசாவாக உயர்த்தினார்.
எங்கள் 10 வருட ஆட்சி காலத்தில் 4 பைசா மட்டும் உயர்த்தி 22 பைசாவாக இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு பத்து வருட ஆட்சி காலத்தில் 60 பைசாவாக பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். போக்குவரத்து துறை என்பது கல்வி துறை, உணவுதுறை போன்று ஒரு சேவை துறையாகும்.
சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சரின் படத்தை திறக்கவேண்டும் என்றால் பிரதமர், குடியரசுதலைவர், கவர்னர், இவர்களில் ஒருவரை அழைத்து படத்தை திறப்பது மரபு ஆனால் மறைந்த ஜெயலலிதா ஊழலில் முதல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அ.தி.மு.க. அரசு அழைத்தும் அவர்கள் படத்தை திறக்க வரமறுத்து விட்டனர்.
இதனால் சபாநாயகரை அழைத்து ஜெயலலிதாவின் படத்தை திறந்து இருப்பது சபையின் மரபு மீறிய செயலாகும்.
இந்த ஆட்சி சத்துணவு துறையில் இருந்து பல்கலைக்கழகம் வரை பேரம் பேசும் ஆட்சியாகதான் இருந்து வருகிறது.
இலவச பஸ்பாஸ், பெண்களுக்கு முன்னுரிமை, முதியோர்களுக்கு சலுகை, கிராம புறங்களுக்கு பஸ் போக்குவரத்து போன்ற காரணங்களால் போக்குவரத்துதுறைக்கு நஷ்டம் வரத்தான் செய்யும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசே மானியம் வழங்க வேண்டுமே தவிர மக்கள் தலைமீது சுமையை ஏற்றி வைக்கக்கூடாது.
போக்குவரத்து துறையில் உள்ள ஊழலை குறைத்தாலும் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கலாம். பஸ் கட்டணத்தை உயர்த்த அவசியம் இல்லை. அதற்காகதான் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் பஸ் கட்டணத்தை குறைக்காவிட்டால் மு.க.ஸ்டாலின ஆணைக்கினங்க மீண்டும் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் ம.தி.மு.க. கனல்காசிநாதன், சி.பி.எம். கட்சி குமார், விடுதலை சிறுத்தை கேப்டன்துரை, ம.ம.க. முகமது ஹாசன், இந்திய முஸ்லிம் லீக் சையத் அன்வர்பாஷா, பென்னாகரம் தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேட்டு நன்றி கூறினார். #tamilnews