சென்னை:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் பெயரில் “நூற்றாண்டு விழா” நடத்தி, எம்.ஜி.ஆர் புகழ் பாடுவதற்கு பதில் தி.மு.க. மீது திட்டமிட்டு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
“எங்கள் ஆட்சியில் என்ன தவறு செய்தோம்” என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியை தொடர்ந்து கேட்டு வருகிறார். அந்த பட்டியலை வெளியிட்டால் இன்னும் நூறு மேடைகள் போட்டாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் பதில் சொல்லவும் முடியாது.
நூறு இடங்களில் காவிரியில் மூழ்கினாலும் அந்த பாவத்தை தொலைக்க முடியாது. ஒரு சிலவற்றை மட்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நீட் தேர்வால் நிகழ்ந்த அரியலூர் அனிதா மரணத்திற்கு யார் காரணம்? கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கடும் பிரிவிகளின் கீழ் வழக்குப் போட்டதற்கு யார் காரணம்? சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு யார் காரணம்?
“என்ன தவறு செய்தோம்” என்று ஒவ்வொரு மேடையிலும் கேட்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாகபட்டினம் மேடையிலும் கேட்டிருக்கிறார். பெரும்பான்மையே இல்லாமல் குறுக்கு வழியில் சட்ட விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே அது தவறு இல்லையா?
எங்கள் கட்சி மேடைக்கு, நீங்களும் கட்சி மேடை போட்டு களத்திற்கு வாருங்கள். அதற்கு பதில் அரசு விழாவின் பின்னால் ஒளிந்து கொண்டு அநாகரிகமான விமர்சனத்தில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் எங்கள் தளபதியின் அறிவுரை என்பதை உணருங்கள்.
அரசு விழாக்களை மிக கண்ணியமாக நடத்தியவர் ஒரே தலைவர் கலைஞர். “கட்சி அரசியல் வேறு. ஆட்சியின் மீதான விமர்சனம்” என்பதை வேறுபடுத்தி நாகரிகமான அரசியலை நடத்தியவர் தலைவர் கலைஞர். அந்த உண்மை கூட தெரியாமல் பதவி பறி போகப் போகும் பீதியில் மேடைகளில் கதை சொல்லித்திரியும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தலைவர் கலைஞர் பற்றிப் பேச தகுதியோ அருகதையோ அறவே இல்லை.
ஆகவே அரசு விழாக்களை “மாமியார் வீடு பற்றி பேசுவதற்கும்” “பொய் பேசுவதற்கும்” “ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என்று ஆணவமாக பேசுவதற்கும் பயன்படுத்த வேண்டாம்.
உங்களுக்குள் பல்வேறு கோஷ்டிகள் இருக்கலாம். கட்சி போஸ்டரில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் சிக்கல் இருக்கலாம்.
தி.மு.க. என்ற பனங்காட்டு நரி இது போன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்து அ.தி.மு.க. பிரச்சாரத்துக்கு அரசு விழாவை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.