தூத்துக்குடி சாயர்புரத்தில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் 
செய்திகள்

வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடி அருகே நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 32 வெளிநாட்டினர் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடினர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இவர்கள் ஆட்டோவில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி, இந்திய பண்பாடு, கலாசாரங்களை அறிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 32 பேர் சென்னை வந்தனர். அங்கிருந்து கடந்த 28-ந் தேதி ஆட்டோவில் பயணத்தை தொடங்கினர்.

அவர்கள் அங்கிருந்து 15 ஆட்டோ மூலம் புதுச்சேரிக்கும், தொடர்ந்து தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து இருந்தனர். அவர்கள் அலங்கார ஆடைகள் அணிந்தும் வலம் வந்தனர். தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு சென்றனர். அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது 15 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தினர்.

ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலைகளையும் அணிந்தனர். அந்த பகுதியில் கரும்பு, வாழையால் தோரணங்கள் அமைத்து இருந்தனர். மேலும் மஞ்சள் குலை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கலிட்டு வழிப்பட்டனர்.

வெளிநாட்டினர் இன்று(புதன்கிழமை) நெல்லை வந்தனர். பின்னர் 6-ந் தேதி திருவனந்தபுரத்துக்கு சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.