புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுதோறும் நுழைவு தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான (2018-19) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆன் லைனில் ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு தேர்வு விண்ணப்பம் நாளை (புதன் கிழமை) முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது.
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி மாலை 5 மணி வரை ஷ்ஷ்ஷ்.ழீவீஜீனீமீக்ஷீ.ஜீuபீuநீலீமீக்ஷீக்ஷீஹ்.ரீஷீஸ்.வீஸீ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் ஹால்டிக்கெட்டை மே மாதம் 21-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதி காலை 8 மணி வரை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தனித் தனியாக அஞ்சல் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பப்பட மாட்டாது.
தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறும். அதன் பின் தகுதி பட்டியல் ஜூன் 20-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், புதுவையில் 150 இடங்களும், காரைக்காலில் 50 இடங்களும் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இதில் பொதுப்பிரிவினருக்கு 74 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 37 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் புதுவையை சேர்ந்த பொதுப்பிரிவினருக்கு 31 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 13 இடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 6 இடங்களும், பழங்குடியினருக்கு 4 இடங்களும், அயல் நாட்டுவாழ் இந்தியர்களுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை ஜிப்மர் டீன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். #JIPMER #MBBSPlaces #tamilnews