செல்போன் பறிமுதல் 
செய்திகள்

புதுவை ஜெயிலில் திடீர் சோதனை- 11 செல்போன்கள் பறிமுதல்

புதுவை ஜெயிலில் திடீர் சோதனையில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவையின் பிரபல ரவுடிகளான மர்டர் மணிகண்டன், கருணா, மடுவுபேட் சுந்தர், வினோத், தமிழரசன், அஸ்வின், நித்தியானந்தம் உள்ளிட்ட ரவுடிகள் கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஏராளமானோர் கைதாகி காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜெயிலில் இருந்தபடியே செல்போன் மூலம் தங்களது கூட்டாளிகள் மூலம் தொழில் அதிபர்களையும், நில உரிமையாளர்களையும் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அதனைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையிலான போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை நடத்தி 7 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெயில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாய்க்கால்களில் 2 மொபைல் போன்கள் கிடைத்தது.

இப்படி வரிசையாக ஜெயிலில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் சிக்னல்களை கண்காணித்த போது தினசரி 100-க்கும் மேற்பட்ட செல்போன் கால்கள், சிறை வளாகத்தில் இருந்து வெளி நபர்களுக்கு பேசப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.

இந்த நிலையில் ஜெயில் ஐ.ஜி. பங்கஜ்குமார்ஜா உத்தரவின் பேரில் ஜெயில் கண்காணிப்பாளர் கோபி, ஐ.ஆர்.பி.என். போலீசார் நேற்று மாலை மத்திய ஜெயிலில் கொலை வழக்கு குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள யு.டி. 1 யார்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டியூப்லைட் பட்டி, கழிவறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

செல்போன்கள் காலாப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.