புதுவை முதலமைச்சர் நாராயணசாமி 
செய்திகள்

கிரண்பேடியை மாற்ற வேண்டும்- ஜனாதிபதியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுவையின் மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக உள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை வந்த ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை கவர்னர் மாளிகையில் நானும் சபாநாயகர் சிவக்கொழுந்துவும் சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக சபாநாயகர் அவரை சந்தித்து விட்டு சென்றார்.

அதன்பிறகு நான் ஜனாதிபதியிடம் ஒரு மனு அளித்தேன். அதில் புதுவையில் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

1987-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம். 2018-ம் ஆண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். தீர்மான நகல்களை அளித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

15-வது நிதி கமி‌ஷனில் புதுவையை சேர்க்காமல் விட்டுவிட்டனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு 42 சதவீத மானியம், யூனியன் பிரதேசத்திற்கு 90 சதவீத மானியமும் அளிக்கின்றனர்.

ஆனால், சட்டமன்றம் உள்ள டெல்லி, புதுவை யூனியன் பிரதேசங்களை நிதி கமி‌ஷனில் சேர்க்கவில்லை. அதேநேரத்தில் புதிதாக உருவாகியுள்ள ஜம்மு, காஷ்மீர் நிதி கமி‌ஷனில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, புதுவை, டெல்லியை நிதி கமி‌ஷனில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். யூனியன் பிரதேசமான புதுவையில் வெளிச்சந்தையில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் கடன் பெறலாம். தற்போது புதுவை 22 சதவீத கடன் பெற்றுள்ளது. பெற்ற கடனை முறையாக செலுத்தி வருகிறோம். எனவே எஞ்சிய சதவீதத்திற்கும் ரூ.700 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்‌ஷனை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் புதுவைக்கு வழங்கவில்லை. இந்த பாகுபாடை களைய வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.

7-வது சம்பள கமி‌ஷனை அமல்படுத்தியதால் ஆண்டுக்கு ரூ.550 கோடி புதுவை அரசுக்கு கூடுதலாக செலவாகிறது. 3 ஆண்டாக இந்த கூடுதல் செலவினத்தை மத்திய அரசு வழங்கவில்லை. 6-வது சம்பள கமி‌ஷன் கூடுதல் செலவுத்தொகையை அளித்தனர்.

மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் அவர் ஈடுபட்டு வருகிறார். எனவே கவர்னர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.

வருகிற 27-ந் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தள்ளி வைக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து கட்சியினரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் இதுதொடர்பாக முடிவு எடுப்பார்கள். கடலில் விழுந்து மரணமடைந்த சிறுவர்களின் பெற்றோர் என்னை வந்து சந்தித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.