செய்திகள்

புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தினகரனுக்கு ஆதரவு

பொதுக்குழு கூட்டத்தை பங்கேற்காமல் புறக்கணித்ததால் 4 எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.யும் தற்போது தினகரன அணியில் இருப்பது உறுதியாகி உள்ளது.

புதுச்சேரி:

ஜெயலலிதா மறைவுக்கு பின் புதுவை அ.தி.மு.க.வும் 3 அணியாக பிளவுபட்டது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணி இணைந்தபோது புதுவை அ.தி.மு.க. 2 அணிகளாக மாறியது.

சென்னையில் நேற்று நடந்த பொதுக்குழுவில் புதுவை அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு செயற்குழு உறுப்பினர் என மொத்தம் 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆகியோர் தனித்தனியாக தங்கள் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுடன் சென்னை சென்று கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதுவை அ.தி.மு.க.வில் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர்.

டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி.யாக கோகுலகிருஷ்ணன் இருக்கிறார். இவர்கள் அனைவருமே நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆரம்பத்தில் இருந்தே தினகரன் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

4 எம்.எல்.ஏ.க்களும் யாருடைய ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் தெளிவற்ற நிலையே இருந்தது.

அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியையும், தினகரனையும் மாறி மாறி சந்தித்து வந்தனர். இதனால் அவர்களிடம் ஒரு ஊசலாட்ட நிலை நிலவியது.

ஆனால், நேற்று அவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் 4 எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.யும் தற்போது தினகரன அணியில் இருப்பது உறுதியாகி உள்ளது.

இது சம்பந்தமாக அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, பொதுக் குழுவில் சசிகலாவையும், தினகரனையும் நீக்கப் போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதில், எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவேதான் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

SCROLL FOR NEXT