மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நாளில் அசாம் மாநிலத்தில் நாட்டிலேயே மிக நீளமான 9.3 கிலோ மீட்டர் நீள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
பிரம்மபுத்திரா நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் அசாம், அருணாசல பிரதேசங்கள் இடையே போக்குவரத்து மேம்படும். ராணுவ போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மோடி பதவியேற்கும் போது 4 கோடி வங்கி கணக்குகள் இருந்தன. இப்போது அது 28 கோடி வங்கி கணக்குகளாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை மோடி அரசு வேகமாக நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் வீடுகள் கட்டி கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளோம். 19 கிலோ மீட்டர் அமைய உள்ள சாலை மேலும் 10 கிலோ மீட்டர் இணைக்கப்பட்டு 29 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைய உள்ளது. இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும்.
எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்து 100 நாட்கள் கடந்திருப்பதற்கு பாராட்டுகிறேன்.
மு.க.ஸ்டாலின் பரிகாரம் செய்யவே குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார். வருகிற 3-ந் தேதி கூட்டணி அமைப்பதற்காக தி.மு.க. சார்பில் நடைபெறும் கூட்டத்தில் வட இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள், அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பிரதமர் மீது குற்றம்சாட்டி மு.க.ஸ்டாலின் வடமாநில தலைவர்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றுக்கட்சிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமரும் ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பாலப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தென்னிந்தியாவிலேயே இரும்புத் தூண்களுடன் அமையும் பாலமாக அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இதன் திறப்பு விழா நடைபெறும். இதுபோல தக்கலை, பார்வதிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான மண் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.