செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி சாயும் கோபுரம் போல் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்த ஆட்சி சாயும் கோபுரம் போல் உள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாலை மலர்

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் இரட்டை குழி தெருவில் அவர் பொது மக்கள் மத்தியில் பேசியதாவது:-

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. கழகங்கள் இல்லாத தமிழகம் மலர்ந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாற்றம் தரும் சக்தியாக பா.ஜனதா புத்துணர்வுடன் எழுச்சி பெற்று வருகிறது.

ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் அந்த தொகுதி தத்தெடுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் ஆர்.கே.நகர் தொகுதி வந்து விடும்.

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் நான் மட்டும்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் மூலம் ரூ.1½ லட்சம் கோடி திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

பா.ஜனதாவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தால் தமிழகத்துக்கு இன்னும் எவ்வளவு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

படமெடுத்து ஆடும் நாகப்பாம்பு போல அ.தி.மு.க., தி.மு.க., குக்கர் ஆகியவை ஜனநாயகத்தை கொத்தி கொல்லும் காட்சியை மக்கள் பார்த்து வேதனை அடைகிறார்கள்.


கடந்த முறை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால்தான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த முறையும் பணப்பட்டுவாடா நடப்பது வேதனைக்குரியது. எனவே தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது வெட்கமாக இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறி. இந்த ஆட்சி சாயும் கோபுரம் போல உள்ளது. சாயும் கோபுரம் எவ்வளவு நாள் நிற்கும், எப்போது கீழே விழும் என்பதை சொல்ல முடியாது. அதே போல்தான் அ.தி.மு.க. ஆட்சி எத்தனை நாள் நிற்கும், எப்போது கீழே விழும் என்பதை உறுதியாக கூற முடியாது.

தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது. அ.தி.மு.க. அழிந்து வருகிறது.