நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்புகிறது. அடிக்கடி தேர்தல் வருவது மாநிலத்திற்கு நல்லது அல்ல. ஊழலற்ற தூய்மையான ஆட்சி நடக்க வேண்டும்.
பொது தேர்தல் வரவேண்டும் என்பது தி.மு.க.வின் விருப்பம். ஆனால் தமிழகத்திற்கு எது நல்லது என்பதை மக்கள் தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அச்சப்படுகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தானாகவே அரசு கவிழ்ந்து விடுமென்று நினைக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையை பார்க்கும் போது சர்க்குலர் சர்வீஸ் பஸ் போல சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்பது தெரியவில்லை.
மேட்டூர் அணை 83 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால் குளங்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் செய்தது எதற்காக? என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். தனிமனித துதி பாடுவது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. அது காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளது. இந்திரா காந்தி முதல் தற்போதைய ராகுல் காந்தி வரை அது தொடருகிறது.
கொடநாடு கொலை விவகாரத்தில் ஒட்டுமொத்த விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.
மாட்டு இறைச்சி விவகாரத்தை கால்நடைகளை ஒழுங்குப்படுத்தும் விவகாரமாகவே மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ப.சிதம்பரம், பினராய் ராய் விவகாரத்தை பொறுத்தவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெற்றாக வேண்டும்.