செய்திகள்

ப. சிதம்பரம் வீட்டில் வருமான வரி சோதனை: தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை பாயும் - பொன். ராதாகிருஷ்ணன்

ப. சிதம்பரம் வீட்டில் வருமான வரி சோதனை குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை பாயும் என்று கூறினார்.

மாலை மலர்

மதுரை:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு எந்த வகையில் பேச வேண்டுமோ அந்த வகையில் பேசி அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் பா.ஜ.க.வில் இணைந்தால் வரவேற்கத்தக்கது.

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தி இருப்பது புதிதல்ல. ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமை செயலகத்தில் நாங்கள் வந்து பேசி இருக்கிறோம்.

தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்றவும், உறவுகளை பலப்படுத்தவும்தான் தலைமை செயலகத்தில் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க.வின் பிள்ளை என்று மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தது ஜெயலலிதா தான். அதனால் தான் தற்போதும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம் என்றார்.

முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வீட்டில் நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து கேட்டபோது, தமிழகம் மற்றும் இந்திய அளவில் தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை நடைபெறத்தான் செய்யும் என்று பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.