செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் மாயமான சிலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் மாயமான சிலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அவற்றை மீட்க சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள சோழர் கால கோவில்களில் அதிகளவில் சிலை கொள்ளை நடந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜசோழன், இவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் திருடப்பட்டதாக திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி அலுவலக முகாமில் முன்னாள் எம்.பி சுவாமிநாதன் புகார் செய்தார். ஐ.ஜி பொன் மாணிக்கவேல் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி வெங்ட்ராமன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கோவிலில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவிலில் இருந்த உலோக திருமேனியாக செய்து இருந்த ராஜராஜசோழன், இவரது மனைவி லோகமாதேவியார் சிலைகள் உள்பட ஏராளமான சிலைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 50 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜராமன், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று வந்து ஆய்வு செய்தனர். இதில் கோவில் சிவாச்சாரியார்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கோவிலில் உள்ள சிலைகளையும், கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தனர்.

இதில் காணாமல் போன கோவில் மகா மண்டபத்தில் 74 செ.மீ. உயரமுள்ள ராஜராஜசோழன் சிலை 53 செ.மீ உயரமுள்ள லோகமாதேவி சிலை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இந்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிலை காப்பகத்தை ஆய்வு செய்த போது நடராஜர் சிலையை ஆய்வு செய்தனர். அதில் சிலையின் பீடத்திற்குள் கந்தர் சிலை மற்றும் முக்கால் அடி உயரமுள்ள பிரதோசநாயகி சிலையும் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை ஏ.டி.எஸ்.பி ராஜாராம் கண்டறிந்தார். மேலும் ராஜராஜ சோழனால் வழங்கப்பட்ட 66 உலோக திருமேனிகள் சிலைகளும் தூசி படிந்து, ஆடைகள் கிழிந்துபோய் இருந்தன.

பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் கூறினர். இந்த சிலைகளில் ஒருசில சிலைகள் தொன்மையான சிலைகள் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனை கோவில் சிவாச்சாரியார்களே தெரிவித்தனர். சிலை காப்பகத்தில் பூட்டு சாவிகளில் ஒன்று சிவாச்சாரியார்களிடமும் மற்றொன்று கோவில் செயல் அலுவலரிடமும் இருக்க வேண்டும். ஆனால் செயல் அலுவலர் சாவியை என்றுமே தன்வசம் வைத்து கொண்டது இல்லை. மாறாக கோவில் கணக்கரிடம் கொடுத்து வைத்தது தெரியவந்தது.

ஆய்வுக்கு பிறகு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறியதாவது:-

சிலைகள் கடத்தல் தொடர்பாக தனிப்படை அமைத்து ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் கல்வெட்டுகளை பல முறை ஆய்வு நடத்தினோம். இதில் இங்குள்ள சிலையை திருடி விட்டு மாறாக போலி சிலையை செய்து வைத்துள்ளனர். மன்னர் காலத்தில் செப்பு சிலையில் ராசேந்திரசோழ ராசா என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை திருடி விட்டு போலி சிலையில் மாமன்னன் ராசராசசோழன் என்ற பெயர் பலகையில் எழுதி வைத்துள்ளனர். இவற்றுக்கு எந்தவித பூஜைகளும் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் மாயமான பல சிலைகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை மீட்க சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிலையை மீட்போம்.

இவ்வாறு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். #tamilnews