செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: கைதான டிரைவரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டிற்கு உறுதுணையாக இருந்த கால் டாக்சி டிரைவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் 1058 காலி பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தியது.

இந்த தேர்வை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 567 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு வெளியிட்ட போது அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணிற்கும் விடைத் தாள்களை வெளியிட்ட பிறகு உள்ள மதிப்பெண்களுக்கும் வேறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விடைத்தாள்களை திருத்தி மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு புகார் அளித்தனர். அதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மத்திய குற்றறப்பிரிவு போலீசார் 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் இந்த மோசடிக்கு உறுதுணையாக கால் டாக்சி டிரைவர் ஒருவர் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரது பெயர் கணேஷ் (28). அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். கால் டாக்சி டிரைவர் மூலம் தான் விரிவுரையாளர் பணிக்கு முறைகேடாக பணம் வாங்கி விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் அதிகம் போட்டு இருப்பதாக தெரிகிறது.

தேர்வர்களுக்கும் இதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் இடையில் பாலமாக கணேஷ் இருந்துள்ளார். அதனால் கணேசை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். குறுக்கு வழியில் விரிவுரையாளர் பணியில் சேர நினைத்தவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வசூலிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கணேசிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.