புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு பனை மடத்து வீதியை சேர்ந்தவர் ஏழுமலை. பெயிண்டர். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் அஜித்குமார் (வயது 21). இவர் லாஸ்பேட்டை மோதிலால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஏழுமலை சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அஜித்குமார் பல முறை கண்டித்தும் ஏழுமலை குடி பழக்கத்தை கைவிடவில்லை. நேற்று இரவு ராணி தனது கணவர் மற்றும் மகனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து விட்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஏழுமலை மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். குடி போதையில் அவர் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அஜித்குமார் கண்டித்தார்.
ஆனால், ஏழுமலை தொடர்ந்து மனைவி- மகனை திட்டினார். இதனால் மனமுடைந்த அஜித்குமார் வீட்டின் அறைக்கு சென்று மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ராணி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜித்குமாரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் ராஜன், தமிழரசன் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.